தைராய்டு சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறிகள்

தைராய்டு

தைராய்டு சுரப்பி சிறியதாக இருந்தாலும் இதன் வேலைகள் மிக அதிகம். பட்டாம்பூச்சு வடிவம் கொண்ட இந்த சுரப்பி 2-3 அங்குலம் அளவானது. ஒரு அவுன்ஸ் எடையுடையது. கழுத்தில் உள்ள இது மூச்சு குழலின் இருபுறமுமாக அமைந்து இருக்கிறது.

இதன் பின்னால் இருப்பதுதான் நான்கு பேரா தைராய்டு சுரப்பி. இது உடலின் கால்சியம் அளவினை சீர் செய்கிறது. இதன் வேலைக்கும் பேரா தைராய்டு சுரப்பியின் வேலைக்கும் சம்பந்தமில்லை. உடலின் செயல்பாட்டு திறனுக்கு தைராய்டு சுரக்கும் ஹார்மோன் அவசியம். தைராக்ஸின் (T4), ட்ரையோ டோதைரோனின் (T3) மற்றும் கல்ஸிடோனின் என்பவையே தைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள்.

தைராய்டு சுரப்பி தண்ணீர் மற்றும் உணவில் உள்ள `அயோடினை' உபயோகித்து இந்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றது. தைராய்டு செல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. தைராய்டு செல் மட்டுமே அயோடினை எடுத்துக் கொள்ளும் தன்மை படைத்தது. இந்த தைராய்டுக்கு எஜமான் உண்டு. பிட்டியூட்டரி சுரப்பிதான் தைராய்டின் எஜமான்.

இந்த பிட்யூட்டரி சுரப்பி மூளையின் அடியில் உள்ளது. பிட்யூட்டரி சுரப்பியில் தைராய்டினை தூண்டி விடும் ஹார்மோன் சுரக்கின்றது. T3, T4 சற்று குறைந்தால் பிட்யூட்டரி சுரக்கும் TSH தைராய்டு சுரப்பியினைத் தூண்டி விடும். இந்த பிட்யூட்டரி சுரப்பிக்கும் ஒரு பெரிய எஜமான் இருக்கின்றது. அதுதான் ஹைப்போதலாமஸ்.

இது மூளையில் இருக்கின்றது. இதன் ஹார்மோன் தைரோடிராசின் (TRH) இதன் வேலை பிட்யூட்டரியினை வேலை வாங்குவதுதான். இத்தனை வேலைகளில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் `தைராய்டு நோய்கள்' ஏற்படுகின்றன.

தைராய்டு சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறிகள் :

இந்த தைராய்டு ஹார்மோனுக்கு உடலின் நிர்வாகத்தில் பல பொறுப்புகளும், பங்கும் உண்டு. பொதுவாக 35 வயதை கடக்கும் பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகின்றது. பலர் இதன் பாதிப்பினை பல காலம் அறியாமலேயே கஷ்டப்பட்டு காலம் தள்ளுகின்றனர்.

தைராய்டு ஹார்மோன் குறைந்தாலும் பிரச்சனைதான். கூடினாலும் பிரச்சனைதான். பரம்பரை, கர்ப்பம், மன உளைச்சல், சத்தான உணவின்மை, நச்சுத்தன்மை, சுற்றப்புற சூழ்நிலை இவைகள் இதன் பாதிப்பிற்கு காரணமாகின்றன.

* கை, கால் ஓய்ந்து விட்டது போல் இருக்கின்றதா, நல்ல தூக்கத்திற்குப்பிறகும் காலையிலும், நாள் முழுவதும் உடல் அதிக சோர்வாக இருக்கின்றதா? உடனடியாக தைராய்டு சோதனை செய்து கொள்ளுங்கள்.

*  எப்பொழுதும் சோகமாகவே இருக்கின்றீர்களா? மகிழ்ச்சி தரும் `செரடோனின்' எனும் ரசாயனம் தைராய்டு ஹார்மோன் குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

*  எதற்கெடுத்தாலும் அதிக வேகம், படபடப்பு என்று இருக்கின்றதா? மனதை அமைதி படுத்த முடியவில்லையா? இது தைராய்டு ஹார்மோன் கூடுதலாக சுரப்பதன் காரணமாக இருக்கலாம்.

*  ஹார்மோன் அதிகம் சுரந்தால் அதிக பசி இருக்கும். ஆனால் அதிக உணவிலும் எடை கூடாமல் இருக்கும்.

*  ஹார்மோன் குறைவாக சுரந்தால் சுவை, வாசனை இவற்றில் மாறுதல் இருக்கும்.

* அதிக ஹார்மோன் படபடப்பின் காரணமாக கவனக்குறைப்பாட்டினை ஏற்படுத்தும். குறைந்த ஹார்மோன் அதிக மறதியினை ஏற்படுத்தும்.

*  குறைந்த ஹார்மோன் உடலுறவில் நாட்டமின்மையை ஏற்படுத்தும். குறைந்த ஹார்மோனால் எடை கூடும். சக்தி குறையும் உடல் வலி ஏற்படும்.

*  உடலில் பல இடங்களில் நாடி துடிப்பு படபடவென இருப்பது போல் இருந்தால் ஹார்மோன் அதிகம் இருக்கலாம்.

*  ஹார்மோன் குறைபாட்டால் உடல் வறண்டு, அரிப்பு இருக்கலாம்.

*  ஹார்மோன் குறைவு மலச்சிக்கலையும், ஹார்மோன் அதிகம் இருப்பது வயிற்றுப் போக்கினையும் ஏற்படுத்தும்.

*  ஹார்மோன் குறைவு மாதவிலக்கின் போது அதிக ரத்தப் போக்கு, வயிற்று வலி, குறைந்த இடைவெளியில் அடிக்கடி மாதவிலக்கு ஏற்படுத்தும்.

* ஹார்மோன் கூடுதலாக இருப்பின் மாதவிலக்குகின் இடைவெளி கூடும். ரத்தப்போக்கு குறைவாக இருக்கும்.

*  பாதம், கை, கால், தோள் இவற்றில் வலி, ஒரு வித குறு குறுப்பு போன்றவை ஹார்மோன் குறைவினால் ஏற்படுபவை.

* ஹார்மோன் குறைவு, கூடுதல் இரண்டுமே உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும்.

* குளிர், உடல் சில்லிப்பு போன்றவை ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுபவை.

* உடல் சூடு, அதிக வியர்வை இவை கூடுதல் ஹார்மோனால் இருக்கலாம்.

* ஹார்மோன் குறைவினால் எப்போதும் தூங்க வேண்டும் என்றே இருக்கும். கூடுதல் ஹார்மோன் தூக்கமின்மையைக் கொடுக்கும்.

* குறைந்த ஹார்மோன் காரணமின்றி எடை கூடச் செய்யும். அதிக ஹார்மோன் அதிகம் சாப்பிட்டும் எடை குறையச் செய்யும்.

*  முடி கொட்டி, தேய்த்து மெலிந்து போகின்றதா? உடனடியாக உங்கள் தைராய்டு ஹார்மோனை சோதனை செய்யுங்கள்.

* உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து இருக்கின்றதா? உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு, மருந்து எதற்கும் கேட்கவில்லையா? வேறேன்ன உடனடி தைராய்டு டெஸ்ட்தான்.
Powered by Blogger.