கொழுப்பு கட்டிகள் ஆபத்தானவையா?


கொழுப்பு கட்டிகள் ஆபத்தானவையா?

கொழுப்புக் கட்டிகள் என்பன நம் உடலின் தோலிற்கு உள் சிறு சிறு பஞ்சு போன்ற கொழுப்பாலான கட்டிகளைக் குறிக்கும். இந்த கட்டிகளுக்கு மற்றுமொரு பெயர் கழலை இவை அடிபோஸ் (Adipose) வகை கொழுப்புகளால் ஆனவை. இதனை மருத்துவ ரீதியாக ஆங்கிலத்தில் Lipoma என சொல்லப்படுகின்றது.
இவை சுமார் 100 பேரில் ஒருவருக்கு உண்டாகின்றன. இவை பொதுவாக ஆபத்து இல்லாதவை. இவை அங்கொன்றும் இங்கொன்றுமாகவோ அல்லது கூட்டமாகவோ காணப்படுகின்றது. இது சராசரியாக 1 cm - 3 cm வரை இருக்கும். ஆனால் சில சமயங்களில் 10 செ.மீ - 20 செ.மீ. வரை கூட வளரக் கூடியது.

காரணங்கள்

பெரும்பாலும் இந்த கொழுப்புக்கட்டிகள் பரம்பரையாகவே காணப்படுகின்றன. ஆனால் சில சமயங்களில் பரம்பரை இல்லாமலும் காணப்படுகின்றன. பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தாலும் இந்த கட்டிகள் இது வரை ஏன் எப்படி எதனால் ஏற்படுகின்றன என கண்டறியப்படவில்லை.

பெரும்பாலான சமயங்களில் இது அறுவை சிகிச்சை செய்து எடுத்து பரிசோதித்துப் பார்த்த பின்னரே இது ஏன் எதனால் ஏற்பட்டது என்பதனை கண்டறிய முடியும். சில சமயங்களில் ஏதாவது அடிபட்ட இடங்களிலும் கூட இது போன்ற கொழுப்புக் கட்டிகள் உண்டாகின்றன. பல அடிப்பட்ட இடங்களில் இவை ஏற்படுவதில்லை என்பதில் இதற்கான காரணமும் தெரியவில்லை.

வகைகள்

கொழுப்புக்கட்டிகளை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வலி உள்ள கொழுப்புக் கட்டிகள் இரண்டாவது வலியில்லாத கொழுப்புக் கட்டிகள். வலியுள்ள கட்டிகள். இவ்வகை கட்டிகள் தொட்டால் வலிப்பவை. பல சமயங்களில் இது வட்ட வடிவில் கட்டி போல இங்கும் அங்கும் நகரக் கூடியவை. சில சமயங்களில் இவை நகராமலும் இருக்கும். வலி இல்லாத கட்டிகள். இவ்வகை கொழுப்புக்கட்டிகள் வலி இல்லாதவை. இவையும் நகரும் தன்மை கொண்டவை. இவை இருப்பது தெரியாது தொட்டும் பார்க்கும் பொழுது மட்டுமே தெரியும். இவ்விரு வகை தவிர ஆழமான கட்டிகள் எனவும் மேலாட்டமான கட்டிகள் எனவும் இரு வகை உள்ளன.

ஆழமான கட்டிகள் - இவை சாதாரணமாக தொட்டுப்பார்த்தால் தெரியாது. ஆழமாக உள்ளே இருக்கும் அழுத்திப் பார்த்தால் தான் தெரியும். இவை பொதுவாக சிறிது மஞ்சள் நிறமாகக் காணப்படும்.

மேலோட்டமான கட்டிகள் - இவை மெல்லிய தோலின் கீழ் மேலெழுந்த வாரியாகத் தெரியும். இதனை தொடாமலேயே பார்க்க முடியும்.

இவை தவிர சில அபூர்வ வகை கொழுப்புக் கட்டிகளும் உள்ளன. அவை
சில செல்களின் வேறுபட்ட மாறுதலான செயல்பாடுகளாலும் கொழுப்பு பொருளை ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடனும் காணப்படுகின்றன. இது அபூர்வமானவை.

இவை அனைத்திற்கும் ஒவ்வொரு வகை பெயர் உள்ளன. ஆங்கிலத்தில் மருத்துவ ரீதியாக அவை தோன்றும் இடம், விதம், வலி போன்றவற்றை வைத்து வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

பொதுவாக இவ்வகை கொழுப்புக்கட்டிகள் 40-60 வயது வரை உடையவர்களுக்கே காணப் படுகின்றன. சில சமயங்களில் இவை குழந்தைகளுக்கும் கூட காணப்படுகின்றன. பொதுவாக கை, கால்களில் இது தோன்றினாலும் பெண்களுக்கு கால்களிலேயே அதிகம் காணப்படுகின்றன.

மருத்துவம் - இதற்னெ பிரத்தியேகமான மருத்துவம் எதுவும் இதற்கு கிடையாது. ஆங்கில மருத்துவத்தில், இருப்பினும் இவை தீங்கு இல்லாதவை என்பதால் இவற்றைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இருப்பினும் வலி இருந்தாலோ உடைத்து சீழ் வெளியேறினாலோ மருத்துவம் செய்து கொள்வது அவசியம். இதற்கு ஆங்கில மருத்தவத்தில் அறுவை சிகிச்சை மட்டுமே உதவும்.

ஆயுர்வேதம் கொழுப்புக் கட்டிகளுக்கும் காரணம் கப தோஷமாறுதல் என்று கூறுகின்றது. கபம் அதிகரிப்பதாலும் அந்த கபத்தை உடலால் எளிதாக வெளிதள்ள முடியாமையாலும், கழிவுப்பொருட்கள் உடலில் சேர்ந்து இத்தகைய கொழுப்புக்கட்டிகளை உண்டாக்குகின்றது என ஆயுர்வேதம் சொல்கின்றது. கபதோஷ மாறுதல்களை சீராக்கினால் இத்தகையப் பிரச்சனைகள் மறையும் என்றும் கூறுகிறது.

வாமன முறை மருத்துவம் செய்வதன் மூலம் இது குறையும் என்றும் வேறு சில மருந்துகளான காஞ்சனார குகுலு போன்றவற்றைக் கொடுப்பதாலும் இத்தகைய பிரச்சனைகள் மறையும் என ஆயுர்வேதம் குறிப்பிடுகின்றது. வாமன முறை என்பது பஞ்சகர்மா முறையில் நான்காம் முறையாகும். இது உடலில் நச்சுக்களை வாந்தி வழியாகவும் மலம் மூலமாக வெளியேற்றும் முறையாகும்.

உடலின் நச்சுக்கள் அதிகரிப்பதால் இத்தகைய சிக்கல்கள் உண்டாவதால் உடலை சுத்தம் செய்தாலும் இத்தகைய பிரச்சனைகள் குறையும் என்று ஆயுர்வேதம் விளக்குகின்றது. பொதுவாக சளிக்கான மருந்துகளும் உடல் சுத்தமாவதற்கான உள்ளுக்கு கொடுக்கும் மருந்துகளை உபயோகிப்பதன் மூலம் மேல் பூச்சாக சில வீக்கம் மற்றும் கட்டிகள் குறைவதற்கான மருந்துகளை சேர்த்து உபயோகிக்கும் பொழுது இந்த சிக்கல்கள் முற்றிலும் குறைகின்றன.

இத்தகைய முறைகளை மருத்துவரின் ஆலோசனையின் பெயரிலேயே செய்தல் சிறந்தது. கட்டி, புற்றுநோய் போன்றவைகளுக்கு ஆயுர்வேதத்தில் செம்பு (காப்பர்) ஒரு சிறந்த மருந்தாகும். செம்பு டம்ளர்களிலோ, சொம்புகளிலோ தண்ணீர் வைத்து தினசரி பருகி வர கட்டிகள் கரையும் என்றும் தேவையற்ற வளர்ச்சிகள் குறையும் எனவும் ஆயுர்வேதம் சொல்கிறது.

Powered by Blogger.