சுருட்டை முடியை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்...
எப்போதுமே ஃபேஷனாக இருக்கும் ஒரே ஹேர் ஸ்டைல் தான் சுருட்டை முடி. இத்தகைய சுருட்டை முடியானது சிலருக்கு பிறக்கும் போதே இருக்கும். அப்படி இயற்கையாக சுருட்டை முடி உள்ளவர்களுக்கு தான், அந்த சுருட்டையை முடியினால் ஏற்படும் தொல்லைகள் தெரியும்.
அதுமட்டுமல்லாமல், சுருட்டை முடி உள்ளவர்கள், தங்களது முடியை வெறுப்பதுடன், அதனை நேராக்க அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் அப்படி தான் செய்யக்கூடாது. ஏனெனில் எப்போதுமே சுருட்டை முடி தான் சிறந்தது. எப்படியென்றால், சுருட்டை முடி இருந்தால், முடி குறைவாக இருந்தாலும், அதிகமாக இருப்பது போன்று வெளிப்படும்.
எனவே அத்தகைய சுருட்டை முடியை வேண்டாம் என்று நினைக்காமல், அதனை எப்படி முறையாக பராமரித்தால் அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து, அதன் படி பராமரித்து சுருட்டை முடியுடன் அழகாக காணுங்கள்.
இங்கு சுருட்டை முடி உள்ளவர்களுக்காக ஒருசில கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தவறாமல் செய்து, சுருட்டை முடியை ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் வைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெய் தடவவும்
சுருட்டை முடி உள்ளவர்கள் தினமும் எண்ணெய் தடவ வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு விரைவில் முடியானது வறட்சி அடைந்துவிடும். அதற்கு காரணம், சுருட்டை முடி உள்ளவர்களின் தலையில் சுரக்கும் இயற்கையான எண்ணெயானது முடியின் நுனி வரை செல்வதில்லை. இதனால் கூந்தலானது சீக்கிரம் வறண்டுவிடுவதோடு, முடி வெடிப்புக்களும் ஏற்படுகிறது. ஆகவே சுருட்டை முடி உள்ளவர்கள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.
ஹேர் பேக்
சுருட்டை முடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க வேண்டுமானால், ஹேர் பேக்குகளை போட வேண்டும். அதிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு ஹேர் பேக் போட வேண்டும். குறிப்பாக மயோனைஸ், முட்டை, பால், தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யக்கூடிய ஹேர் பேக்குகளை வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.
ஷாம்பு
சுருட்டை முடி உள்ளவர்கள், கூந்தலுக்கு அதிகமாக கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்த கூடாது. இதனால் கூந்தல் இன்னும் அதிகப்படியாக வறட்சி அடைவதோடு, கூந்தலின் பொலிவும், தரமும் போய்விடும். எனவே சீகைக்காய் போட்டு வாரம் இருமுறை தலைக்கு குளித்து வந்தால், சுருட்டை முடி ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும்.
கண்டிஷனிங்
சுருட்டை முடியை பராமரிப்பதில் கண்டிஷனிங் செய்வது இன்றியமையாதது. அதற்காக கடைகளில் விற்கப்படும் கண்டிஷனர்களை பயன்படுத்தாமல், இயற்கை கண்டிஷனர்களான முட்டை, ஆப்பிள் சீடர் வினிகர், டீ போன்றவற்றைப் பயன்படுத்தி கண்டிஷனிங் செய்ய வேண்டும்.
சுருட்டை முடி உள்ளவர்கள் முடியை சீவும் போது சரியான சீப்புகளை பயன்படுத்த வேண்டும். அதிலும் பெரிய பற்களை கொண்ட சீப்புக்களை பயன்படுத்துவது தான் மிகவும் சிறந்தது. ஏனெனில் சிறிய பற்களை கொண்ட சீப்புக்கள் சுருட்டை முடியில் சிக்கி பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் தவறாமல் செய்து வந்தால், சுருட்டை முடி ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அதுமட்டுமின்றி, சுருட்டை முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும்.