முதுகில் மயக்க ஊசி போடுவதால் முதுகு வலி வருமா?
சிசேரியன் உள்ளிட்ட பல பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு முதுகில் மயக்க ஊசி போடுவது காலங்காலமாக இருந்து வருகிற பழக்கம். அப்படிப் போடப்படுகிற ஊசியால் முதுகுவலி வருவதாக ஒரு அபிப்ராயமும் மக்களிடையே உண்டு.
உண்மையில் மயக்க ஊசிக்கும், அதன் தொடர்ச்சியாக வரும் முதுகுவலிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.
”நம்மில் 90 சதவிகித மக்களுக்கு முதுகுவலி இருக்கிறது. முதுகெலும்பைச் சுற்றியுள்ள சவ்வுப் பகுதியில் ஏற்படுகிற பாதிப்பு, தசைகள், எலும்புகள் என எதிலும் உண்டாகிற பாதிப்புகளின் காரணமாக முதுகு வலி வரலாம்.
அறுவை சிகிச்சைக்கு முன்பான மயக்க ஊசியானது, முதுகுத் தண்டு வடத்தைச் சுற்றியுள்ள வெளி உறைக்கு வெளியே சிறிது செலுத்தப்பட்டு, தேவையான பகுதியை, தேவையான நேரத்துக்கு வலியின்றி இருக்கச் செய்யக் கூடியது. எனவே இந்த ஊசியானது, மேலே சொன்ன சவ்வு, எலும்பு அல்லது எலும்புச் சந்திப்புகளில் செலுத்தப்படாமல், எந்த விளைவையும் உண்டுபண்ணாமல், அந்த வழியே கூட செல்லாமல், துல்லியமாக முதுகுத் தண்டு வடத்தில் மிக மெல்லிய ஊசியின் மூலம் செலுத்தப்படுகிறது.
எனவே முதுகில் போடப்படுகிற மயக்க ஊசிக்கும், முதுகு வலிக்கும் 0.1 சதவிகிதம் கூட தொடர்பில்லை. வலியுள்ள 90 சதவிகித மக்களில் அதிகபட்சமாக 10 சதவிகிதம் பேரே ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அவர்களில் 25 சதவிகிதம் பேருக்குத்தான் முதுகில் மயக்க ஊசி போடப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மீதி சதவிகிதத்தினர், அறுவை சிகிச்சை இல்லாவிட்டாலும் வலியை அனுபவிப்பவர்கள்.
அதாவது, அறுவை செய்யப்படாமலே, முதுகுப் பகுதியில் எலும்பு, சவ்வு அல்லது எலும்பு இணைப்புகளில் பிரச்னை இருப்பதாலோ, உடல் பருமன், நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருப்பதாலோ அவர்களுக்கு முதுகு வலி இருக்கலாம்.
முதுகுப் பகுதியில் போடப்படுகிற மயக்க ஊசியானது 1885ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கிற சிகிச்சை. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட, பாதுகாப்பான, முழுமையான மயக்க மருந்தும்கூட. எனவே மயக்க மருந்து என்றதும் பயப்படத் தேவையில்லை.
இன்னும் சொல்லப்போனால், முதுகு வலிக்கு சில நேரங்களில் முதுகு வழிதான் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தி சிகிச்சையளிக்கப்படும். அதை ‘பெர்க்யூட்டனஸ்’ சிகிச்சை முறை என்கிறோம். எனவே முதுகு வழியே செலுத்தப்படுகிற மருந்துகள் குறித்து, இனி பயப்படத் தேவையில்லை…” என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார் – ஆர்.வைதேகி