புற்றுநோய்க்கு இலவச மருந்து!
அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் கேன்சரை குணப்படுத்தும் ஒன்றரை லட்சம் விலைமிகுந்த மருந்தான ‘Imatinib Mesylate’ ஐ இலவசமாக தருகிறார்கள்... அண்மையில் ஃபேஸ்புக் மற்றும் இணையதளங்களில் வேகமாகப் பரவிய செய்தி இது. இது எந்த அளவு உண்மை? அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் டாக்டர் டி.ஜி.சாகர் அவர்களை அணுகினோம்.
‘‘கிரானிக் மைலேட் லுக்கேமியா எனும் ரத்தப் புற்றுநோய் வகைக்குத்தான் இந்த மருந்து தரப்படுகிறது. இந்த நோய் வந்தவர்களின் வாழ்நாள் 2000மாவது ஆண்டுக்கு முன்பு வரை மூன்று ஆண்டுகளாகத்தான் இருந்தது. இந்த ‘இமிட்டின்பி மிஸ்லேட்’ எனும் மாத்திரை நோவார்டிஸ் நிறுவனத்தால் 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாத்திரை ‘கிளிவிக்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது அந்த ஆண்டின் 10 அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. இந்த மருந்து நோயாளிகளின் வாழ் நாளை 10 ஆண்டுகள் வரை அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் இந்த வகை கேன்சரால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்ய நோவார்டிஸ் நிறுவனம் முன்வந்தது. முக்கிய கேன்சர் மருத்துவமனைகளில் இம்மருந்தை இலவசமாக கிடைக்கச் செய்யும் திட்டத்தைத் தொடங்கியது. அதன்மூலம் பல ஏழை மக்கள் இந்த மருந்தால் பயன்பெறுகிறார்கள். இந்த மாத்திரைக்கு ஆகும் ஒரு மாத செலவு இந்தியக் கணக்குப்படி ஒன்றரை லட்சம்.
கிரானிக்மைலேட் லுக்கேமியா தவிர அக்குவேட் லிம்பைட் லுக்கேமியா, கேஸ்ட்ரோ இன்டஸ்டினல் ஸ்ட்ரோமல் டியூமர் ஆகிய கேன்சர் நோய்களுக்கும் இந்த மருந்து பயன்படுகிறது. மற்ற இரண்டு வகை கேன்சர்களிலும் பிஎச் குரோமோசோம் பாசிட்டிவ் டெஸ்ட் செய்து அது பொருத்தமாக இருந்தால் மட்டுமே கொடுக்க முடியும்.
எல்லா வகை புற்றுநோய்களுக்கும் இந்த மருந்து ஏற்புடையது என இணையத்தில் நிலவும் கருத்து தவறானது. அது மட்டுமல்ல... அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் மட்டுமல்ல... இந்தியாவின் மற்ற பெரிய கேன்சர் மையங்களிலும் இந்த மாத்திரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத்திரை மூலம் 60 சதவிகித நோயாளிகளின் வாழ்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியே...’’
நன்றி தினகரன்