மழைக் காலத்தில் சருமத்தையும், கேசத்தையும் பாதுகாப்பது எப்படி?


கோடைக் காலத்தில் என்ன தான் பல லோஷன்களையும், க்ரீம்களையும் தடவிக் கொண்டு உங்கள் சருமத்தையும் முடியையும் நீங்கள் பாதுகாத்துக் கொண்டாலும், மழைக் காலத்தில் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ள அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.

இந்த மழைக் காலத்தில் அவ்வப்போது நீங்கள் மழையில் நனைய நேரிடலாம். காற்றில் ஈரப்பதம் நிச்சயம் அதிகரிக்கும். இவை உங்கள் சருமத்தையும் கேசத்தையும் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே கோடைக் காலத்திலிருந்து மழைக் காலத்திற்குத் தாவும் போது, சிரமம் பார்க்காமல் கொஞ்சம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால், மழைக் கால பாதிப்புகளிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

முக்கியமான மூன்று...

முகத்தில் பருக்கள், தோல் வறட்சி உள்ளிட்ட சில பிரச்சனைகளை நாம் மழைக் காலத்தில் எதிர்பார்க்கலாம். சருமப் பாதுகாப்பிற்கு க்ளீன்ஸிங், டோனிங், மற்றும் மாய்ச்சுரைஸிங் ஆகிய மூன்றும் முக்கியமானவை. தினமும் முகத்தையும் உடம்பையும் நன்றாகக் கழுவ வேண்டும். நல்ல மாய்ச்சுரைஸர்களைப் பயன்படுத்த வேண்டும். மழையில் நனைய நேர்ந்தால் வீட்டிற்கு வந்த உடனேயே உடைகளை மாற்றுவதும் சருமத்திற்கு நல்லது.

சரும வறட்சியைப் போக்க..

மழைக் காலத்தில் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படலாம். பாதாம் பேஸ்ட் மற்றும் தேன் கலந்த கலவையை உலர்ந்த சருமத்தில் தடவி, மசாஜ் செய்து, சுமார் 7 நிமிடங்களுக்குப் பின்னர் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு ஸ்பூன் தேன், தயிர் மற்றும் ஜோஜோபா எண்ணெய் ஆகியவற்றின் கலவையை சருமத்தில் தடவி, 10 நிமிடங்களுக்குப் பின்னர் நீரில் கழுவுதல் நலம்.

சருமத்தில் உள்ள எண்ணெய், அழுக்கை நீக்க...

சருமத்தில் உள்ள துளைகளில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் எளிதில் தேங்கி விடும். எண்ணெய் படிந்த சருமத்திற்கு, ஓட்மீல் ஸ்க்ரப் அல்லது பழுத்த பப்பாளிப் பழத்தைப் பயன்படுத்தலாம். மேலும் 2 ஸ்பூன் பன்னீர் அல்லது கிளிசரினுடன் ஸ்ட்ராபெர்ரி பழத்தைக் கலந்து சருமத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

மைல்ட் ஃபேஷ் வாஷ் அவசியம்

முகத்தைக் கழுவ, மைல்டான ஃபேஷ் வாஷே போதுமானது; அது நல்ல பலனைக் கொடுக்கும். மேலும் நீரினாலான தயாரிப்புகளை இந்த மழைக் காலத்தில் பயன்படுத்துவது நல்லது. அவைதான் எளிதில் சருமத்தில் ஒட்டாது. சருமத் துளைகளில் உள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளையும் அவை எளிதில் உறிஞ்சி எடுத்து விடும்.

அதிக மேக்கப் வேண்டாம்

நம் சருமத்தை எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். அதே நேரத்தில் அதிக அளவிலான மேக்கப்பையும் தவிர்த்தால் மழைக் காலத்திலும் சருமம் அழகாகும்.

ஷாம்பு குளியல்

மழைக் காலத்தில் தலை முடியை நன்றாகப் பராமரித்துக் கொள்வதும் அவசியமாகும். வாரத்திற்குக் குறைந்தது 3 முறை ஷாம்பு போட்டு தலைமுடியைக் கழுவ வேண்டும். கண்டிஷனர்களை உபயோகிப்பது மழைக் காலத்திற்கு இன்னும் அதிகம் நல்லது.

தலைக்கு மசாஜ் வேண்டும்

பியூட்டி பார்லரிலோ அல்லது வீட்டிலேயோ அடிக்கடி தலைக்கு மசாஜ் செய்து கொண்டால் தலை முடி அடர்த்தியாகவும் திடமாகவும் இருக்கும். பொடுகும் வராமல் தடுக்கலாம்.

சீப்புக்களில் கவனம் தேவை

முடி அதிகம் உதிராமல் தவிர்க்க, அகலமான பற்களையுடைய சீப்புக்களை மட்டுமே தலை வார வேண்டும்.

இயற்கையாக உலர்த்தவும்

தலை முடியை உலர்த்தும் போது, டவலால் மெதுவாகவே துடைக்க வேண்டும். இது மழைக் காலத்திற்கு மட்டுமல்ல; எப்போதுமே!
Powered by Blogger.