ப்ளீடிங்... எது நார்மல்?
ஒரு பெண்ணுக்கு ஒரே நாளில் ஆகும் ரத்தப்போக்கு வேறு சில பெண்களுக்கு மாத விலக்கு நாட்கள் முழுவதும் வெளியேறும் ரத்தப்போக்காக இருக்கலாம். ரத்தப்போக்கானது 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்தப் போக்கு எல்லாம் முழுவதுமே ரத்தம் அல்ல. அதில் பாதி அளவே ரத்தம். ஒவ்வொரு பெண்ணுக்கும் சரியான அளவு ரத்த இழப்பு எவ்வளவு என்பதை கணக்கிடுவது கடினம். மாதவிடாயின் போது ஏற்படும் ரத்த இழப்பின் சராசரி அளவு 30-40 மி.லி.
சரியான அளவு என்பது 10 மி.லி. முதல் 80 மி.லி. வரை. 80 மி.லி.யை தாண்டினால் அது அதிக ரத்தப்போக்கு. அது ரத்த சோகைக்குக் காரணமாகலாம். நாப்கின் உபயோகிப்பதை வைத்து மட்டுமே ரத்தப்போக்கின் அளவை சரியாக கணக்கிட முடியாது. சில நாப்கின்கள், மேலுள்ள ஈரத்தை மட்டும் உள்ளிழுக்கும் தன்மை உடையதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கையடக்கமான நாப்கின் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிக ரத்தத்தை உறிஞ்சலாம்.
சில மாதிரி நாப்கின்களை எடுத்துக் கொண்டு, அதில் குறிப்பிட்ட அளவு ஏதேனும் திரவத்தை ஊற்றி அந்த நாப்கின் எவ்வளவு திரவத்தை உள்ளிழுக்கும் என்று ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு நாப்கினின் ஈரத்தை உறிஞ்சும் தன்மையும் மாறுபடுவதை அறியலாம். எனவே, சரியான அளவைத் தெரிந்து கொள்ள ஒரே மாதிரியான நாப்கினை கொடுத்துப் பரிசோதிக்க வேண்டும்.
நாப்கின்களை எடை எடுத்து ரத்தப்போக்கின் அளவை அறிவது நேரத்தை மிச்சப்படுத்தும். சரியான அளவைக் காட்டும். மேலும் நாப்கினில் ரத்தம் மட்டுமின்றி நமது வியர்வை, வெள்ளைப்படுதல் உள்ளிட்ட திரவங்களும் கலந்தே இருக்கும். இது ரத்தப்போக்கின் எடையை பாதிக்கும். சில நேரம் ரத்தம் உறையலாம். உலர்ந்த ரத்தத்தின் எடை ஈர ரத்தத்தின் எடையை விட குறைவாகவே இருக்கும்.
மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்தப்போக்கை 3 வழிகளில் கண்டறியலாம்
1. நாப்கினின் எடையை பரிசோதித்தல்
ஒரு உபயோகப்படுத்தாத நாப்கின் அல்லது டாம்பூன் (உறுப்பின் உள்ளே சொருகிக் கொள்கிற ஒருவித நாப்கின்) எடையை அளந்து கொள்ள வேண்டும். பிறகு உபயோகித்த நாப்கின்கள் அல்லது டாம்பூனின் எடையை சோதிக்க வேண்டும். இரண்டுக்குமான வித்தியாசமே மாதவிலக்கின் போது ஆகும் ரத்தப்போக்கின் எடையாகும்.
2. உபயோகப்படுத்திய பின்
தூக்கி எறியக்கூடிய நாப்கின்களில் திட்டுதிட்டாக உள்ள ரத்தத்தையும், முழுவதுமாக நனைந்த நிலையில் உள்ள நாப்கினில் உள்ள ரத்தத்தையும் கொண்டும் கணக்கிடலாம். (உதாரணத்துக்கு முழுவதும் நனைந்த நாப்கினின் எடை 10 மி.லி. எனக் கணக்கிடப்படலாம். இதன் மூலம் பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கின்களின் எண்ணிக்கையை வைத்து ரத்தப்போக்கின் அளவை (மி.லி.) அறியலாம்.)
3. அல்கலைன் ஹிமடின்
வேதியியல் சோதனை மூலமும் சரியான ரத்தப்போக்கின் அளவை அறியலாம். இது பெரும்பாலும் மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம்.