சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள்
இன்று நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதி மிகவும் பொதுவான ஒன்றாகிவிட்டது. கீழ்க்கண்ட சில விஷயங்களைப் பின் பற்றினால் சர்க்கரை நோய் உங்களை நெருங்காமல் செய்யலாம்...
குடும்பத்தில் சர்க்கரை நோய் இல்லாதவருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. அவர்களை ஆராய்ந்த போது, அதிக உணவு, உடல் உழைப்பு இல்லாமை, அதிகமான டென்சன் போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் வருவதை டாக்டர்கள் கண்டறிந்தனர். இது சைவ உணவு உண்பவர்களுக்கும் பொருந்தும்.
1. நடந்தால் நல்லது...........
அதிக எடை உள்ளவர்களுக்கும், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள் உறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். அதோடு இன்சுலின் சுரப்பதில் தடையும், இதய நோய் சம்பந்தப்பட்ட பாதிப்பும் இருக்கலாம். இதைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி மிகச் சிறந்த வழி. முறையாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு 8 மாதத்துக்குப் பிறகு 8 சதவீத கொழுப்பு கரைவதையும், அடி வயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு 30 நிமிடம் என்று வாரத்துக்கு ஐந்து நாட்கள் நடப்பவர்கள் 5 முதல் 7 சதவீதம் வரை உடல் எடையைக் குறைக்க முடியும். 58 சதவீதம் அளவுக்கு சர்க்கரை நோய் அபாயத்தைத் தடுக்க முடியும். ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி இன்னும் அவசியம். 'டைப் 2' சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்துக்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களை விட இவர்களுக்கு இதயநோய் அபாயம் மிக மிகக் குறையும்.
2. தவறாத காலை உணவு........
காலை உணவை ஒழுங்காகச் சாப்பிடாதவர்கள், அடிக்கடி காலை உணவைத் தவிர்ப்பவர்களை விட, காலை வேளையில் ஒழுங்காகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமனும், இன்சுலின் சுரப்பதில் தடையும் 35 முதல் 50 சதவீதம் வரை குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால், காலை உணவைத் தவறவிடவே செய்யாதீர்கள். அதிலும் குறிப்பாக, நவதானிய உணவுகளைச் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
3. சிரிப்பே சிறப்பு........
பொதுவாக நன்றாக வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்களுக்கு நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியும், மனநிலையும் இருக்கும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, 'டைப் 2' சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக மனம் விட்டுச் சிரித்தால் சாப்பாட்டுக்குப் பிறகு ஏறும் குளுக்கோஸ் அளவு அவர்களுக்கு மிகவும் குறைவாக இருக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித் தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.
அவர்களை ஒருநாள், சீரியசான உரையைக் கேட்க வைத்தார்கள். இன்னொரு நாள், நன்றாக வாய்விட்டுச் சிரிக்கும் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்குகொள்ள வைத்தார்கள். சீரியசான சொற்பொழிவைக் கேட்ட நாளை விட, நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று சிரிப்பில் மூழ்கிய போது குளுக்கோஸ் அளவு குறிப்பிட்ட அளவு குறைந்தது. ஆகவே சிரிக்கத் தயங்காதீர்கள். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிரியுங்கள், மற்றவர்களையும் சிரிக்க வையுங்கள்!