கர்ப்பிணிகளுக்கு கைகொடுக்கும் மருத்துவ ஆலோசனைகள்

கர்ப்பிணிகளுக்கு

கர்ப்ப காலத்தில், பெண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் அதிகம். மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை அப்படியே ஏற்று, பின்பற்றினால், பிரசவம் சுகமாக அமையும்.
அந்த ஆலோசனைகளில் மிக முக்கியமான சில:

கர்ப்பம் தரித்ததும் அல்லது மாதவிலக்கு தள்ளிப் போனதும், ஏதாவது மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, அதை நிறுத்த வேண்டும்.

திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டால்,
மருத்துவருடைய ஆலோசனை இல்லாமல், தன்னிச்சையாக மாத்திரை, மருந்துகளை சாப்பிடக் கூடாது.

கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். உடனே அதற்கு மாத்திரை தேடக் கூடாது. மருத்துவரை பார்த்து, உணவு கட்டுப்பாடு மூலமாக, சரி செய்ய வேண்டும். அப்படியும் சரியாகவில்லை என்றால், அதற்கு என்ன சிகிச்சை என்பது டாக்டருக்கு மட்டுமே தெரியும்.
அதை மீறினால், குழந்தை அதிக எடையுடன் பிறக்கும். பிறவிக் கோளாறும் ஏற்படலாம். குழந்தைக்கு சர்க்கரை வியாதி வரவும் வாய்ப்பு உண்டு.

கர்ப்பிணிகளுக்கு ரத்தக் கொதிப்பு இருக்குமானால், டாக்டர் சொல்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் உப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாதாரணமாக கால்கள் வீங்கித் தானாகக் குறைந்து விடுமானால் பிரச்னை இல்லை. ஆனால், உடல் முழுவதும் வீங்கினால், அது உயர் ரத்த அழுத்தமாகவே இருக்கும்.

ரத்த சோகை இருந்தால், பீட்ரூட், கேரட், பேரீச்சை, ஆப்பிள், கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும். கொழுப்பு உணவுகள், பாஸ்ட் புட், கோக்
போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

தலைசுற்றல், வாந்தி, லேசாக உதிரம் கூட வரலாம். காரம் மற்றும் எண்ணெய் அதிகம் இல்லாமல், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். பழங்கள், தண்ணீர் என, நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

யோகா, உடற்பயிற்சிகள் செய்யலாம். ஆனால், வயிறு விரிந்து சுருங்கும் சில பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். நடைபயிற்சி மிகவும் நல்லது.
கடைசி மூன்று மாதங்களில் நேராகப் படுக்கக் கூடாது. குழந்தையின் எடை கர்ப்பப்பையை அழுத்தி, ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இடது பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். எப்போது எழுந்தாலும் ஒரு
பக்கமாகத் திரும்பி எழ வேண்டும்.

பிரசவ நேரத்தில் அல்லது 9வது மாதத்தில், சில நேரத்தில் வலி தோன்றும். பிரசவ வலி என்றால், விட்டு விட்டு வரும். போகப் போக வலி அதிகரிக்கும். சாதாரண வலி என்றால், வந்து விட்டுப் போய் விடும்.

எட்டு முதல் 10 மணி நேரம் வரை, வயிற்றுக்குள் அசைவு தெரியவில்லையா; வலி இல்லாமல் சிறுநீர் போல் தண்ணீர் வெளியேறுகிறதா; சில நேரங்களில் வலியுடன் நீர் போகிறதா? உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
Powered by Blogger.