ஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா?



மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஆனால் வீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். குண்டு உடல் இளைப்பதற்கு மிக எளிய உடற்பயிற்சிகள் உள்ளன.

தொப்பை குறைய வேண்டுமா? கால்களை நெருக்கமாய் வைக்காமல் சற்றே இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்த பிறகு, இரண்டு கைகளையும் உயரே தூக்கி, முதுகுப்புறமாய்ச் சற்றே வளைத்துப் பின் அவற்றை மெல்லக் கீழே கொண்டுவந்து இரண்டு கைகளாலும் இரண்டு கால்கட்டை விரல்களைத் தொடவும்.



இவ்வாறு குனியும்போது மூச்சை மெல்ல வெளியேற்ற வேண்டும். பின் பழைய நிலைக்கு மெல்ல இரு கைகளையும் உயர்த்தவும். இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு தொடக்கத்தில் பத்து முறை செய்யலாம். போகப்போக, எண்ணிக்கையை அதிகரிக்கலாம். உடற்பயிற்சி செய்கையில், உடலை மிகவும் தளர்வாகவும் வைத்துக்கொள்ளக் கூடாது.

அளவுக்கு மீறிய இறுக்கத்திலும் வைத்துக்கொள்ளக் கூடாது. நடுநிலையான இறுக்கத்துடன் உடல் இருக்க வேண்டும்.  இதேபோல் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, அதன் பின் குதிகால்களை உயர்த்திக்கொண்டு முன்னங்கால்களால் நின்று, மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

பிறகு குதிகால்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தவாறே, மூச்சை வெளியேற்றி, கைகளை அவை இணையாக இருக்கும்படி முன்புறமாக நீட்ட வேண்டும். மீண்டும் பக்கவாட்டில் மூச்சிழுத்து நிறுத்திப் பின் முன் சொன்ன பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதையும் சிறுகச் சிறுக அதிகரித்துக்கொண்டே போகலாம். இது நுரையீரலை வலுவாக்கும்.

இடக் காது முனையை வலக்கையாலும், வலக் காது முனையை இடக் கையாலும் பற்றியபடி – இவ்வாறு இரு காது முனைகளையும் பிடித்துக்கொண்டே – உட்கார்ந்து எழ வேண்டும். இதையும் கொஞ்சங் கொஞ்சமாய் அதிகமாக்கலாம். இந்த உடற்பயிற்சி இடை, தொடை, கால் தசைகள், கைகள் ஆகியவற்றை வலுப்படுத்தும்.

நாம் தோப்புக்கரணம் என்று சொல்லும் இதை அமெரிக்காவில் அண்மைக்காலமாய் உடற்பயிற்சி நிலையங்களில் புகுத்தியிருக்கிறார்கள். இதனால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்குவதாய்க் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இவற்றையெல்லாம் செய்வதற்குப் பதினைந்து நிமிடங்கள் போதும்.

இருபத்து நான்கு மணிப்பொழுதில் இதற்கு நம்மால் கால் மணி நேரம்கூட ஒதுக்க முடியாதா என்ன?  இவற்றைச் செய்ய முடியாத முதியோர்க்கு மட்டுமே நடைப்பயிற்சி சிறந்ததாகும். முடிந்த அளவுக்கு விரைந்த நடை நல்லது. “ஜாகிங்’ எனப்படும் நெளிந்த நடை யாருக்குமே உகந்ததன்று என்பதைக் கொஞ்ச நாள்களுக்கு முன்னால் அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

சில மருத்துவமனைகளில், முதுகுவலி, இடுப்பு வலி, சுளுக்கு ஆகியவற்றுக்கு ஆளானவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றிக் கேட்டறிந்த மருத்துவர்கள் அவர்களில் 90 விழுக்காட்டினர் “ஜாகிங்’ செய்பவர்கள் என்பதைக் குறித்துக்கொண்டு பிறகு இவ்வாறு அறிவித்துள்ளனர்.  காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், 5 அல்லது 6 கோப்பைத் தண்ணீர் பருகினால், உடனுக்குடனாக வயிறு காலியாகிவிடும்.

மலச்சிக்கலே அனைத்து உடல் சிக்கல்களுக்கும் அடிப்படை என்று சொல்லப்படுகிறது. இப்போது கண்டவர்களெல்லாம் ஜிம்மை நடத்துவதால் ஆபத்துகள் அதிகம் என்று சொல்லலாயிற்றே ஒழிய, ஜிம்மை ஒட்டுமொத்தமாய்க் குறைத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம்.

எந்த ஜிம்மிலும் டாக்டர் ஒருவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஜிம்மால் நமக்கு ஆகும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவை நம் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பயிற்சிகள் வாயிலாக மிச்சப்படுத்தலாம்.

Powered by Blogger.