வசிகர அழகு தரும் முல்தானி மெட்டி
முல்தானி மெட்டி முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது மற்றும் சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது. மேலும் தோலின் முகப்பரு மற்றும் கறைகள் நீக்க உதவுகிறது.
முல்தானி மெட்டி உண்மையிலேயே தோல் பராமரிப்பு பொருளாக உள்ளது. முல்தானி மெட்டி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய, முல்தானி மெட்டி தரக்கூடிய அழகு குறிப்புகளை பார்க்கலாம்....
* முல்தானி மெட்டி நன்றாக எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதை அனைத்து விதமான சருமத்தினரும் பயன்படுத்தலாம். கோடை காலத்தில் ஏற்படும் சரும கருமையை நீங்க பெரிதும் உதவுகிறது..
* எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்கள் முல்தானி மெட்டியுடன் ரோஜா நீர் சேர்த்து பேஸ் பேக் போட்டால் மென்மையான எண்ணெய் இல்லாத முகத்தை பெறலாம்.
* உலர்ந்த மற்றும் தடிமனான தோல் உடையவர்கள் முல்தானி மெட்டியுடன் பாதாம் பேஸ்ட் மற்றும் பால் கலந்து பேஸ் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பொலிவடைவதை காணலாம். மேலும் வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* கோடை காலத்தில் சில ஒவ்வாமை (அலர்ஜி), சருமம் சிவத்தல் மற்றும் தடித்தல் இருந்தால் முல்தானி மெட்டி ஒரு நல்ல நிவாரணியாகவும் பயன்படுகிறது.
* சிலருக்கு முகத்தில் பருவால் ஏற்றபட்ட தழும்புகள் மற்றும் அம்மை நோயால் வந்த தழும்புகள் இருக்கும். அவர்கள் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் அரைத்த கேரட் விழுது மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் 2 அல்லது 3 நாட்கள் செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதை காணலாம்.
* முல்தானி மெட்டியுடன் அரைத்த பாதாம் விழுது மற்றும் கிளிசரின் சேர்த்து முகத்தில் போட்டால் கரும்புள்ளிகள் படிப்படியாக மறையும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது.
* 1 டீஸ்பூன் முல்தானி மெட்டியுடன் 1 முட்டையின் வெள்ளை கரு, 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் சருமத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து வசிகரிக்கும் நிறம் கிடைக்கும்.