முடி உதிரும் பிரச்சனைக்கான தீர்வுகள்
ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது.
முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விடயமே.
முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைபாடான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்றுவதால் முடி கொட்டுவது அதிகரிக்கலாம். தலையில் பொடுகு ஏற்பட்டாலும் முடி கொட்டும். தலையின் தோல் பகுதியில் காணப்படும் வறட்சியின் காரணமாக முடி கொட்டலாம்.
தலையின் தோல் படலத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிசுக்கினாலும் முடி கொட்டும். வியர்வை அதிகமாக சுரத்தல், தைராய்டு ஹார்மோன் குறைபாடு, பரம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம்.
ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம்.
ரத்த சோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச்னை இருக்கும். தலைப்பகுதியில் சொரியாசிஸ் பிரச்னை இருந்தாலும் முடி கொட்டும். ஷாம்பு மற்றும் எண்ணெய்யை மாற்றுவதால் மட்டும் முடி கொட்டும் பிரச்னையை தீர்க்க முடியாது.
முடிகொட்டுவதற்கு முன் சில அறிகுறிகள் ஏற்படும். முடி வலுவிழந்து மெல்லியதாக மாறும். முடியில் மெலனின் குறைபாட்டினால் முடியின் கருப்பு வண்ணம் குறைந்து சிவப்பு வண்ணம் அதிகரிக்கும். எப் போதும் வறட்சியாக காணப் படும். நுனிப்பகுதி வெடிக்கும்.
இதன் அடுத்த கட்டமாக முடி கொட்ட ஆரம்பிக்கும். ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வது மற்றும் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் முடி கொட்டும் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
பாதுகாப்பு முறை: ஊட்டச்சத்து மற்றும் இரும்புச் சத்து உள்ள உணவுகள் தினமும் இருக்கும்படி பார்த்து கொள்ளவும். அதேபோல் முடியை அடிக்கடி அலசி அதில் அழுக்கு சேருவதை தடுக்கவும். முடிக்கு எண்ணெய் வைக்காமல் வறண்ட நிலையில் வைத்திருந்தால் முடியின் நுனிப்பகுதி வெடித்து முடி வலுவிழந்து உதிர்ந்து விட வாய்ப்புள்ளது.
எனவே முடிக்கு தகுந்த ஷாம்புவை டாக்டரின் ஆலோசனைப்படி பின்பற்றலாம். பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு தொடங்கிய பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முடி கொட்டும் பிரச்னை சிலருக்கு ஏற்படுகிறது.
எனவே மாதவிலக்கு குறைபாடு இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும். வாரத்துக்கு மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஷாம்புவை அடிக்கடி மாற்றக்கூடாது. மேலும் அரப்பு மற்றும் பூந்திக்காயை பொடி செய்தும் தலைக்கு குளிக்க பயன்படுத்தலாம். முடியை மென்மையாக கையாள வேண்டும். இயற்கையான காற்றில் முடியை உலர்த்துவது நல்லது.
முடி உதிர்தல், உடைதல் இரண்டு பிரச்னைக்குமே தோல் மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது. பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் அதற்கான ஷாம்பு மற்றும் சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் விடுபடலாம்.
மேலும் சொரியாசிஸ் உள்ளவர்களும் அதற்கான சிகிச்சை எடுப்பது அவசியம். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் பிரச்னை இருப்பின் அதையும் சரி செய்யவும். முக்கியமாக டென்ஷனைக் குறைக்க வேண்டும். தலைக்கு ஆயில் மசாஜ் போன்ற கூடுதல் கவனிப்பும் வேண்டும்.
பதிவுகளை முகநூலில் பகிரவும் விருப்பம் தெரிவிக்கவும் மறந்துவிடாதிர்கள் உறவுகளே