காஃபி, தேநீர் இரண்டில் எது நல்லது?



நீங்கள் நகர்ப்புறத்தில் வசித்தாலும் சரி, கிராமங்களில் வசித்தாலும் சரி உங்களுக்கு காபியோ, தேநீரோ குடிக்கும் பழக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால், திடீரென ஒருநாள் ஏதாவது ஒரு பத்திரிகையில் காபி குடிப்பது கெடுதல், தேநீர் குடிப்பது நல்லது என்று ஒரு ஆய்வு முடிவு சொல்வதாக, பத்திரிகைகளில் செய்தி வெளிவரும். அடுத்து சில நாட்கள் கழித்து, இதை அப்படியே உல்டா செய்து இன்னாரு தகவல் வெளிவரும்.


உண்மையில் காஃபி நல்லதா, தேநீர் சிறந்ததா?

இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்பு, காஃபி, தேநீர் ஆகிய பானங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். காஃபி, தேநீர் ஆகிய இரண்டு பானங்களிலுமே காஃபீன் என்ற பொருள் இருக்கிறது. உடலில் காஃபீன் சேரும்போது அது இதயத்தையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது.

 குறைந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. அதாவது மிகக் குறைந்த காலகட்டத்தில் அதிக அளவு காஃபியையோ, தேநீரையோ அருந்தினால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால், ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் காஃபி, தேநீர் குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது நிறுத்த வேண்டும்.

காஃபீனால் சில நன்மைகளும் இருக்கின்றன. இவை பித்தப்பையிலும் சிறுநீரகத்திலும் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. எடை குறைக்கும் மாத்திரைகளில் சிறிய அளவில் காஃபீன் சேர்க்கப்படுகிறது. இவை அதிகக் கொழுப்பை எந்தவித முயற்சியுமில்லாமல் கரைப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், உண்மையில் காஃபீன் இருக்கும் மாத்திரைகள் மிகக் குறைவான அளவிலேயே இந்த வேலையைச் செய்கின்றன. ஆனால், காஃபீனுக்கு பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அதனால், சாப்பிடுவது குறைந்து எடை குறையலாம்.

ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி, குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. ஒவ்வாரு வகையிலான காஃபியிலும் இருக்கும் காஃபீனின் அளவு மாறும் என்பதால், ஒருவர் இவ்வளவுதான் காஃபி குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. தவிர, ஒவ்வொரு மனிதருக்கும் காஃபீனை ஏற்கும் அளவும் மாறுபடும்.

உயர் ரத்த அழுத்த குறைபாடு உடையவர்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காஃபி குடிப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களைப் பொறுத்தவரை, காஃபியை நீண்ட காலம் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கு செய்வதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால், ஒரு நாளைக்கு மூன்று கப் அல்லது அதற்கு மேல் தேநீர் குடிப்பது அந்த அளவுக்கு தண்ணீர் குடித்தால் கிடைக்கும் பலன்களுக்கு இணையானது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுபோக கூடுதல் நலன்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்திருக்கிறது.

காஃபியிலும் தேநீரிலும் பாலிஃபினால்ஸ் என்ற பொருள் இருக்கிறது. இது நம் உணவில் இருக்கும் இரும்புடன் சேர்ந்துவிடும். அப்படிச் சேர்ந்துவிட்டால், அந்த இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவது கடினமாகிவிடும். அதனால், உணவு உண்பதற்கும் முன்பும் பின்பும் காபி, தேநீர் அருந்தக்கூடாது.


தேநீரைப் பொறுத்தவரை, துத்தநாகம், மங்கனீஸ், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான பல தனிமங்கள் தேநீரில் இருக்கின்றன. வழக்கமாக தேநீர் குடித்தால், அது உடலில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் என்றுதான் நம்ப்ப்பட்டுவந்த்து. ஆனால், தி யுரோப்பியன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியூட்ரீஷியனில் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை இதற்கு மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. அதாவது தண்ணீரைப் போலவே, தேநீரும் உடலில் இருக்கும் நீரின் அளவை அதிகரிக்கிறது. தவிர, இதய நோயைத் தடுப்பதோடு, சிலவகை புற்று நோயையும் தடுக்கிறதாம்.

தேனீரில் இருக்கும் ஃப்ளவோநாய்ட்ஸ் என்ற பாலிஃபினோல் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்களே இந்த உடல் நல செயல்பாடுகளுக்கு காரணம். இவை தேயிலையில் அதிக அளவு இருக்கின்றன. இந்த ஃப்ளவோநாய்ட்ஸ்கள் செல் சேதமடைவதைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு மூன்று - நான்கு கப் டீ குடிப்பது மாரடைப்பு வரும் வாய்ப்புகளைக் குறைப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இதுதவிர, பற் சொத்தை ஏற்படுவது, பல் அழுகுவது போன்றவற்றை தேநீர் தடுக்கிறது. எலும்புகளையும் உறுதி செய்கிறது.


"உண்மையில் தேநீர் குடிப்பது தண்ணீர் குடிப்பதை விடச் சிறந்தது. தண்ணீர் உடலில் இருக்கும் நீர்ச் சத்தை மட்டுமே அதிகரிக்கிறது. ஆனால், தேநீர், நீர்ச் சத்தை அதிகரிப்பதோடு, ஆண்டிஆக்ஸிடண்ட்களையும் கொண்டிருக்கிறது. இதனால், நமக்கு இரட்டை பலன்கள் கிடைக்கின்றன. தேநீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பது, நகர்ப்புற மாயை." என்கிறார் லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கேரி ரக்ஸ்டன். தேநீர் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதற்கு சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.


ஆக, இப்போதைக்கு, தேநீர் குடிப்பது, காபி குடிப்பதைவிட சிறந்த்து என்று வைத்துக்கொள்ளலாம்.

பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
https://www.facebook.com/tamilforall
Powered by Blogger.