அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள்
பரம்பரைக் காரணங்களால் கொலஸ்ட்ரால் அதிகரித்தவர்களுக்கு தோலில் மஞ்சள் படிவுகள் காணப்படும். இதை ஸாந்த லேஸ்மா (Xanthelasma) என்று சொல்வார்கள். பெரும்பாலும் கண்களுக்கு கீழே காணப்படும். இந்தக் கொழுப்பு படிவங்கள் நோயாளிகளின் தசை நாண்களிலும் படிய வாய்ப்புண்டு.
இவர்களுக்கு மூட்டு பாதிப்புகள் அதிகமாக இருக்கும். ரத்தத்தில் டிரைகிளிசரைடு கொலஸ்ட்ரால் மிகுந்தவர்களுக்கு உடலில் கொப்புளங்கள் போல் கொலஸ்ட்ரால் படிவுகள் ஏற்படும். விழித்திரையில் பார்த்தால், ரத்த ஓட்டம் தெரியாது. ஏதோ பால் ஓடுவது போல் கொலஸ்ட்ரால் மிகுந்த இரத்தம் காட்சி அளிக்கும்.
இவர்களுக்கு கணைய அழற்சி ஏற்பட்டு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும். மூளையில் ரத்த ஓட்டம் மெதுவாக நடைபெறுவதால் பல்வேறு நரம்பு பாதிப்புகளும் ஏற்படும். கை,கால் பகுதிகளில் மதமதப்பு ஏற்படலாம். மூட்டு உபாதைகள் ஏற்படலாம். கண்கள் உலர்ந்து போகலாம். பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.