முடி கொட்டுவதற்கான காரணங்கள்
அனைவருக்குமே தினமும் 50-100 முடி கொட்டிக் கொண்டு தான் இருக்கும் என்பது தெரியும். அது இயற்கையான ஒன்று. அவ்வாறு இல்லாமல், சில சமயங்களில் கொட்டும் முடியின் அளவானது 1,00,000 மேல் இருக்கும்.
ஆனால் அதனை உடனே அனைவராலும் கண்டுபிடித்துவிட முடியாது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் தான், எதற்கு இவ்வளவு முடி கொட்டுகிறது என்று யோசிப்போம். அதிலும் முடியை பிடிக்கும் போது, அதன் அடர்த்தி குறையும் போது தான், தலை முடியானது அளவுக்கு அதிகமாக கொட்டுகிறது என்று தெரியும்.
இவ்வாறு முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் போதிய ஊட்டச்சத்து இல்லாமை, சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகப்படியான கெமிக்கல் கலந்த பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் சில நேரங்களில், அது உடலில் உள்ள நோயின் அறிகுறியாகவும் இருக்கும்.
ஆம், கூந்தல் உதிர்தலானது இரத்த சோகை, தைராய்டு, கர்ப்பம் போன்ற பல காரணங்களினாலும் ஏற்படும். அதுமட்டுமின்றி, வேறு சில வித்தியாசமான நோய்களாலும், கூந்தல் கொட்ட ஆரம்பிக்கும். அதுவும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், சொரியாசிஸ் போன்ற பல பிரச்சனைகளாலும் கூந்தல் உதிரும்.
சரி, இப்போது இத்தகைய முடி கொட்டுவதற்கான மருத்துவரீதியான காரணங்கள் என்னவென்று பார்ப்போமா!!!
தைராய்டு குறைபாடு
தைராய்டு சுரப்பியானது சரியாக தைராய்டு ஹார்மோன்களை சுரக்காவிட்டால், கூந்தல் உதிர்தல் ஏற்படும்.
அலோபிஷியா ஏரியேட்டா (Alopecia Areata)
இது ஒரு வகையான நோய். இந்த நோய் வந்தால், உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்கள், மயிர்கால்களை தாக்கி, ஸ்கால்ப்பில் வட்ட வடிவிலான திட்டுக்களை உண்டாக்கி, நாளடைவில் வழுக்கையை ஏற்படுத்திவிடும். ஆகவே வழுக்கை வராமல் இருக்க வேண்டுமெனில், உடனே தோல் நோய் மருத்துவரை அணுக வேண்டும்.
வளர்ச்சியற்ற முடி உதிரல் (Telogen Effluvium)
கர்ப்பம், சர்ஜரி அல்லது மன அழுத்தம் போன்றவற்றை சந்தித்தால், இந்த வகையான முடி உதிரல் ஏற்படும். இந்த வகையான கூந்தல் உதிர்தலில், கூந்தலானது கொத்து கொத்தாக கையில் வரும். எனவே இந்த நிலையில் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
ஸ்கால்ப் நோய்த்தொற்று
சரும நோய்களில் ஒன்றான படை, சருமத்தில் மட்டுமின்றி, ஸ்கால்ப்பிலும் தான் ஏற்படும். இவ்வாறு படையானது வந்தால், இதனால் ஏற்படும் ஒரு நன்மை என்னவென்றால், இதனை முறையாக சிகிச்சை செய்து வந்தால், மீண்டும் முடியானது நன்கு வளரும்.
சரும நோய்கள்
சருமத்தில் அரிப்புக்களை ஏற்படுத்தும் நோய்களாலும், கூந்தல் உதிர்தல் ஏற்படும். உதாரணமாக, கொப்புளங்கள் மற்றும் சில வகையான லூபஸ் நோய்கள் தாக்கினால், அதனால் ஏற்படும் தழும்புகள் உள்ள இடங்களில் நிரந்தரமாக கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும்.
சிகாட்ரிசியல் அலோபிஷியா (Cicatricial Alopecia)
இது மிகவும் அரிதான நோய் தான். இருப்பினும் இந்த நோய் வந்தால், மயிர்கால்கள் அழிக்கப்பட்டு, முடி வளர்வதை முற்றிலும் தடுத்துவிடும். இருப்பினும் இதற்கு முறையான சிகிச்சையை எடுத்து வந்தால், மயிர்கால்கள் அழிக்கப்படுவதை தடுக்க முயற்சிக்கலாம்.
புற்றுநோய்
புற்றுநோய்க்கான கதிரியக்க தெரபி மற்றும் ஹீமோதெரபியை எடுத்துக் கொண்டாலும், கூந்தல் உதிரும்.
இரத்தசோகை
உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், மயிர்கால்களுக்கு போதிய இரத்தம் செல்லாமல், அதற்கு வேண்டிய சத்துக்களின்றி, கூந்தல் உதிர ஆரம்பிக்கும்.
ட்ரிச்சோடில்லோமானியா (Trichotillomania)
இது ஒருவித மனநல நோய். எப்படியெனில், இந்த நோய் இருந்தால், நமது கூந்தலை நாமே பிடுங்குவோம். அதுமட்டுமின்றி, கண் இமைகள், புருவங்கள் போன்ற இடங்களில் உள்ள முடியையும் பிடுங்க வேண்டுமென்று தோன்றும்.